Sai Prem

Tamil Story-அர்ஜூனனும் கிருஷ்ணரும்

May 20, 2021 Sai Team Season 1 Episode 77
Tamil Story-அர்ஜூனனும் கிருஷ்ணரும்
Sai Prem
More Info
Sai Prem
Tamil Story-அர்ஜூனனும் கிருஷ்ணரும்
May 20, 2021 Season 1 Episode 77
Sai Team

Tamil human value story based on faith and devotion

http://saibalsanskaar.wordpress.com

Show Notes Transcript

Tamil human value story based on faith and devotion

http://saibalsanskaar.wordpress.com

அர்ஜூனனும், கிருஷ்ணரும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்த போது, வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும்படி அவர்களைக் கேட்டார்.

அர்ஜூனன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க, “ஆஹா! இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்காவது உபயோகப்படுமே” என்றெண்ணி வயோதிகர் சந்தோஷத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்றார்.

இதைத் தொலைவிலிருந்து கவனித்த கள்வன் ஒருவன் களவாடி சென்று விட்டான்.

சுமார் பத்து தினங்கள் கழித்து, மீண்டும் அந்த வழியே வந்த அர்ஜூனன் இதை கேள்விப்பட்டு, இந்த முறை விலையுயர்ந்த நவரத்தினக் கல்லை கொடுத்து, “இதையாவது பத்திரமாக வைத்திருந்து வாழ்க்கையை சுகமாக வாழுங்கள்” என்றான்.

இந்த முறை மிகுந்த கவனத்துடன் அதை வீட்டிற்கு கொண்டு சென்றவர், தன் மனைவி, பிள்ளைகளிடம் கூட சொல்லாமல் பரணில் இருந்த ஒரு பானையில் இந்த நவரத்தினக் கல்லை போட்டு வைத்தார். அவ்வப்போது வீட்டில் யாருமில்லாத சமயம் மட்டும் அதை எடுத்துப் பார்த்து விட்டு, கவனமாக பாதுகாத்து வந்தார்.

இதையறியாத அவர் மனைவி, ஒரு முறை பரணிலிருந்த அந்த பானையை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஆற்றிற்கு நீரெடுக்கச் சென்றாள். பானையை கழுவும் போது, அந்த கல் ஆற்றில் தவறி விழுந்து விட்டது.

அவள் நீரை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையும் சமயம், அதைக் கவனித்த வயோதிகர் அந்த குடத்தை பார்த்து அதிர்ச்சியாகி, “எங்கே அதிலிருந்த கல்?” என்று மனைவியை கேட்டார்.

ஏதுமறியாத மனைவி நடந்ததைக் கூற, உடனே ஆற்றிற்கு சென்ற அவர் அன்றிரவு வரை தேடியும் பலனின்றி வீட்டிற்கு சோகத்துடன் திரும்பினார்.

சில தினங்கள் கழித்து, மீண்டும் கிருஷ்ணரும் அர்ஜூனனும் வயோதிகரைப் பார்க்கும் போது, அவர் நடந்ததைக் கூறினார். அர்ஜூனன் கிருஷ்ணரிடம், “இவர் அதிர்ஷ்டமே இல்லாதவர்” என்று கூறினான்.

அதை ஆமோதித்த கிருஷ்ணர், “இந்த முறை நான் அவனுக்கு இரண்டு  காசுகளை மட்டுமே கொடுக்கிறேன்” என்றார்.

அர்ஜூனன் ஆச்சரியப்பட்டான். இரண்டு காசுகளை மட்டுமே பெற்ற வயோதிகர் கிளம்பிய பிறகு, அர்ஜுனன் கிருஷ்ணரைப் பார்த்து, “இதென்ன விந்தை….! இரண்டு காசுகள் மட்டும் அவருக்கு என்ன சுகத்தை கொடுத்து விடும்” எனக் கேட்டான்.

“எனக்கும் தெரியவில்லையே” எனக் கூறிய கிருஷ்ணர், “என்னதான் நடக்கிறது பார்க்கலாம் வா, அவன் பின்னால் செல்லலாம்” எனக் கூறினார்; இருவரும் வயோதிகரை பின் தொடர்ந்தனர்.

அவர் வீட்டிற்குச் செல்லும் வழியில் மீனவன் ஒருவன் “உயிருடன் நான் பிடித்து வைத்திருக்கும் இரண்டு மீன்களை வாங்கிக் கொள்கிறாயா?” எனக் கேட்டான்.

உடனே தனக்குள் யோசித்த வயோதிகர், “இந்த இரண்டு சாதாரண காசுகள் எப்படியும் என் குடும்பத்தின் ஒருவேளை பசியைக் கூட போக்காது” என எண்ணி, மீன்களை மறுபடியும் ஆற்றிலேயே விட்டு விட வேண்டும் என்ற முடிவுடன் வாங்கினார்.

அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டு விட்டு அடுத்ததை விடும் முன், அது சுவாசிக்க முடியாமல் அதன் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதை பார்த்து, மீனின் வாயில் விரலைவிட்டு சிக்கியிருந்ததை அவர் எடுத்தார்.

அதைப் பார்த்த வயோதிகர் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றார்.

ஆம்! அவர் மனைவி ஆற்றில் தவறவிட்ட விலையுயர்ந்த கல் தான் அது…!

உடனே சந்தோஷத்தின் மிகுதியால், “என்னிடமே சிக்கி விட்டது” என்று கூச்சலிட்டார்.

அதே நேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவரிடம் கொள்ளையடித்த கள்வன் அங்கு வர, அவன் திடுக்கிட்டு, தன்னைத் தான் கூறுகிறார் என்றெண்ணி, மறுபடியும் ஓடுகையில் கிருஷ்ணரும் அர்ஜூனனும் அவனைப் பிடித்து விட்டனர்.

கள்வன் அனைத்தையும் ஒப்புக் கொண்டு, இவரிடம் களவாடியது மட்டுமல்லாது, மற்ற காசுகள், அணிகலன்கள் மற்றும் அனைத்தையும் கொடுத்து விட்டான்.

வயோதிகருக்கு அனைத்தையும் கொடுத்து, அவரை அனுப்பிவிட்டு, ஆச்சரியப்பட்ட அர்ஜூனன் கிருஷ்ணரிடம், “இது எப்படி சாத்தியம்?” எனக் கேட்க கிருஷ்ணரும் சிரித்துக் கொண்டே…

“இதே வயோதிகர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என எண்ணினார். அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல் மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார். ஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை. ஆனால், இப்போதோ தன்னிடமிருந்தது மிகக் குறைவான  மதிப்பு என்பது தெரிந்து, தனக்கு உதவாவிட்டாலும் இன்னொரு உயிராவது வாழட்டுமே என தன்னலமில்லாது நினைத்ததால், அவரை விட்டு சென்ற செல்வம் அவருக்கே கிடைத்தது. இதில் எனது செயல் ஏதுமில்லை” எனக் கூறினார்.

உண்மை என்னவென்று தெரியுமா அர்ஜுனா – மற்றவர்கள் துன்பத்தில் இருக்கும் போது, அவர்களுக்கு நீ உதவி செய்தால், கடவுளின் பணியை நீயும் சேர்ந்து செய்வதால், அவர் உன்னை பாதுகாத்து வருகிறார். மற்றவர்களுக்கு கடவுளின் அன்பை ஏதாவது ஒரு விதத்தில் கொடுப்பது தான் உண்மையான சேவை.

நீதி:  

ஒவ்வொருவரும் பலனை எதிர் பார்க்காமல் செய்கின்ற செயல்கள் உரிய நேரத்தில் பயனளிக்கும்.

இத்தகையவர்களுக்கு கடவுள் எச்சமயமும் உதவி புரிவார். தன்னலமற்ற சேவையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.